Skip to main content

பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கு தடை!

Published on 30/12/2024 | Edited on 30/12/2024
 Afghanistan ordered to ban on windows in places used by women

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் தாலிபான் அரசு மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களில் ஜன்னல்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாலிபான் அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆ பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்டும் காணாத வகையில் குடியிருப்பு கட்டிடங்களில் ஜன்னல்கள் கட்ட தடை விதிக்கப்படுகிறது. முற்றம், சமையலறை, கிணறு மற்றும் பெண்கள் பொதுவாகப் பயன்படுத்தும் பிற இடங்களில் வேலை செய்யும் போது அவர்களை பார்ப்பது குற்றச் செயலாகும். 

எனவே, புதிய கட்டிடங்களில் முற்றம், சமையலறை, அண்டை வீட்டுக் கிணறு மற்றும் பெண்கள் பொதுவாகப் பயன்படுத்தும் பிற இடங்களில் பார்க்க அனுமதிக்கும் ஜன்னல்கள் இருக்கக்கூடாது.  இதன் மூலம் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். அண்டை வீட்டில் ஜன்னல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய துறைகள் கட்டுமானத்தை மேற்பார்வையிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளைப் படிக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்