மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரை சட்ட அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். தற்போது 4,5 பேர் இறந்தால் கூட பெரிதாக பேசப்படுகிறது. ஆனால், சுதந்திரந்திற்காக இந்த சமுதாயத்தில் 5,000, 10,000 பேர் இறந்திருந்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். அந்த வரலாறுகளை எல்லாம், இந்த நாட்டு மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஆங்கிலேயர் படையெடுப்பில் கொள்ளையடித்து செல்லுகிற போது, இந்த சமுதாயம் தான் முன் நின்று ஒரே நேரத்தில் 5,000 பேர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். அது போல், உசிலம்பட்டி அருகே 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விவசாயத்திலும், தொழில்துறையிலும் நாம் முன்னணியில் இருந்தால் கூட படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினால், நமது வரலாறு மறைக்கப்பட்டு வெளியே கொண்டு வராத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி, படிப்படியாக அரசு வேலைவாய்ப்பில் நீங்கள் வந்து கொண்டிருப்பதை நான் மனதாற பாராட்டுகிறேன்” என்று பேசினார். ஆண்ட பரம்பரை என குறிப்பிட்டு சாதி ரீதியாக பேசிய அமைச்சரின் பேச்சு சர்ச்சையாக மாறியுள்ளது.