நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக ஏராளமான ரசிகர்கள், மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கோயம்பேடு பகுதியில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் மறைந்த விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த்தின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, கோயம்பேடு பகுதியில் பேரணி நடத்த வேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கையை தமிழக அரசு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோர் தலைமையில் பேரணியானது நடைபெற்றது. இந்த பேரணியில் விஜயகாந்த் பாடல்கள் ஒலிக்க விட்டபடி தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆரவாரமாகப் பேரணியை நடத்தினர்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விஜயகாந்த் மறைந்த போது, கட்சிகள், சாதிகள், மதங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றுகூடி இதே இடத்தில் கடந்த வருடம் அஞ்சலி செலுத்தினார்கள். நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது மூன்று முறை வந்த விஜயகாந்த்தின் நினைவஞ்சலியில் கலந்துகொண்டார். அதோடு மட்டுமல்லாமல், விஜயகாந்த்தை அரசு மரியாதையோடு இறுதி மரியாதை செய்தோம். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் விஜயகாந்தை ஏற்றுக்கொண்டதால் தான் இன்றைக்கு, நாங்களும் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து கட்சியினருக்கும் இந்த நினைவஞ்சலியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தோம்.
எங்களுடைய அழைப்பை ஏற்று அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இன்று ஒரு நாள் முழுவதும் விஜயகாந்த்தின் நினைவை என் மனதில் கொண்டு மெளன அஞ்சலி செலுத்தினேன். அமைதி பேரணி நடத்த இருக்கிறோம் என்று முறைப்படி காவல்துறையை பலமுறை அணுகி அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தேமுதிக தொண்டர்களும், மக்களும் திரண்டு இந்த பேரணியை அமைதியான முறையில் நடத்தியிருக்கிறோம். சட்ட ஒழுங்கிற்குக் கட்டப்பட்டவர்கள் நாங்கள், அதனால் சட்ட ஒழுங்கை மீறி என்றைக்கும் நாங்கள் செயல்பட மாட்டோம். விஜயகாந்த்தின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக இன்று அமைதியான முறையில் பேரணியை நடத்தியிருக்கிறோம். அதற்காக, காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.