உலகிலேயே கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டங்களில் ஒன்றாக ஐரோப்பா இருந்து வருகிறது. இந்தச்சூழலில் அண்மைக்காலமாக அக்கண்டத்தில் மீண்டும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா கண்டத்தின் இயக்குநரான ஹான்ஸ் க்ளூக், ஐரோப்பா கண்டத்தில் உள்ள 53 நாடுகளில் கரோனா பரவும் வேகம் மிகுந்த கவலையளிப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் ஐரோப்பா மீண்டும் கரோனா தொற்றின் மையமாகியுள்ளது என்றும், கரோனா தொற்று அதிகரிப்புக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், குறைவாகத் தடுப்பூசி செலுத்தப்படுவதுமே காரணம் எனவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில், 10 நாடுகள் மிகவும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் பல்வேறு நாடுகளில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
நெதர்லாந்தில் மூன்று வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி நாட்டில் இலவச கரோனா பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கட்டாய முக கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு விதிக்க ஆஸ்திரியா அரசு ஆலோசித்து வருகிறது. நார்வே நாட்டில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் ஷாட்கள் வழங்கப்படுகிறது. இத்தாலி அடுத்த மாதம் முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் ஷாட் வழங்கவுள்ளது.