தெற்கு பாகிஸ்தானில் இன்று (07.10.2021) அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஆறு குழந்தைகள், ஒரு பெண் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தே இந்த 20 பேரில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் ஹர்னாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து, டார்ச் வெளிச்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துவருகின்றனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிபிடத்தக்கது.