கரோனா வைரஸின் தடயங்கள் பாரிஸ் நகரத்தைச் சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் ஆற்றுநீரில் கண்டறியப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட இரு ஆறுகளில் இருந்து அந்த நகரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,800 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உலோகம், பிளாஸ்டிக் என அனைத்து பொருட்களின் மீதும் குறிப்பிட்ட காலம் வரை வாழும் இந்த கரோனா வைரஸ் பாரிஸ் நகரத்தைச் சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் ஆற்றுநீரில் கண்டறியப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரின் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அந்நகரத்தின் தெருக்களைச் சுத்தம் செய்யவும், பூங்காக்களுக்கு நீரூற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நீரில் இருந்து 27 மாதிரிகளை எடுத்து அந்நாட்டு அரசு சோதனைகள் மேற்கொண்டது. இதில் நான்கு மாதிரிகளில் கரோனா வைரஸின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த இரு நீர் ஆதாரங்களில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் நீர் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.