
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி கிராம பகுதியில் 'ஜனநாயகன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக தவெக தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நேற்று வருகை புரிந்தார்.
அதனைத் தொடர்ந்து தாண்டிக்குடி கிராமத்தின் மலை உச்சியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியார் இடத்தில் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. படப்பிடிப்பு பகுதிக்கு செல்லும் சாலை தாண்டிக்குடி கிராமத்திலிருந்து கரடு முரடான, ஏற்ற இறக்கமான பாதையாக அமைந்து இருப்பதால் பிக்அப் மற்றும் ஜீப்கள் மட்டும் சென்று வருகின்றன. நடிகர் விஜய் 4வீல் ஜீப் மூலம் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளார்.
தாண்டிக்குடி கிராமத்தில் கேரவன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் தவெக கட்சியின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த பகுதியில் முகாமிட்டுள்ளார்.மேலும் படப்பிடிப்பு நடைபெறும் இந்த தனியார் இடத்திற்குச் செல்லக்கூடிய சாலையில் படப்பிடிப்பு நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவன காவலர்கள் இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு விவசாயம் சார்ந்த பணிகளுக்கு செல்லும் பணியாளர்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். மேலும் கட்சி தொண்டர்கள் இப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கட்சி தொண்டர்கள் இந்த பகுதிக்கு வந்து திரும்பிச் செல்கின்றனர். மேலும் இந்த படப்பிடிப்பு பகுதியைச் சுற்றி காவலர்கள், பவுன்சர்கள், பாதுகாவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் ரசிகர்களும் பொதுமக்களும் விஜய்யின் படப்பிடிப்பு பார்க்க அப்பகுதியில் முகாமிட்டு வருகிறார்கள்.