அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் யாருக்கும் க்ரீன் கார்ட் எனப்படும் குடியுரிமை சான்று வழங்கப்படாது என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பொருளாதார ரீதியிலும் இதனால் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஒருபுறம் கரோனா உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டில் உலகம் எதிர்கொண்ட பொருளாதார மந்தநிலையின்போது ஏற்பட்டதைப் போன்ற ஒரு மிகப்பெரிய நெருக்கடியை தற்போது மீண்டும் சந்தித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில், எதிர்காலத்தில் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தயார்படுத்தியுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார் அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப்.
அதன் முதல் நிலையாக, அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் யாருக்கும் க்ரீன் கார்ட் எனப்படும் குடியுரிமை சான்று வழங்கப்படாது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நிரந்தர குடியுரிமை கோரும் தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் அதிகம் நம்பியுள்ள H1B விசா குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் H1B விசா வழங்குதலிலும் புதிய விதிகளை அமல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.