போர்முனைப் பகுதிகளில் இருந்து சொந்த நாடுகளில் வாழ முடியாத சூழலில் உயிரைப் பணயம் வைத்து வேறு நாடுகளுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரக்கணக்கான கி.மீ கடந்து கடல் வழியாகச் சிறிய ரக கப்பலில் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ளனர். அப்படி அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரந்தர விசா கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியா அரசு இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில் ஈரான், இலங்கை நாட்டைச் சேர்ந்த 22 பெண்கள் மெல்போனில் இருந்து ஆஸ்திரேலியா பாராளுமன்ற வரை நடைப்பயணமாகச் சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த நடைப்பயணம் பாம்புகள், வன விலங்குகள் நிறைந்த காடுகள் மழை, சகதி, கற்கள் எனக் கரடுமுரடான பாதைகள் என 650 கி.மீ தூரம் பயணிக்கின்றனர். அப்போது, பெண்களின் கால்கள் புண்ணாகிப் போனாலும் லட்சிய பயணத்தை நிறுத்தவில்லை. பல இடங்களில் இரவில் தங்கவும், உணவுக்கும் சிகிச்சைக்கும் நல்ல உள்ளங்கள் உதவி வருகின்றனர். இந்தப் பயணத்தின் முடிவில் நல்ல தீர்வு கிட்டும் என்ற எண்ணத்தோடு வலிகளை மறந்து பயணிக்கிறார்கள்.
இந்த நடைப்பயணத்தில் பங்கேற்று இருக்கும் ரதி நம்மிடம் பேசியபோது, “இலங்கையிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா வந்தேன். எங்க பிள்ளைகள் படிக்கணும் சந்தோசமா வாழணும்னுதான் இங்கே அகதியாக வந்தோம். எங்களைப் போல பல நாடுகளில் இருந்தும் வந்தவர்களுக்கு விசாரணை முடிந்து நிரந்தர விசா கொடுத்துட்டாங்கன்னா இங்கே உள்ள அனைத்து சலுகைகளும் கிடைக்கும். படிப்பு, வேலை வாய்ப்பு என எல்லாமே கிடைக்கும். ஆனால் விசாரணை முடங்கி கிடக்கிறது.
இதனால் நிரந்தர விசா கிடைக்கல. இப்ப எங்கள் கோரிக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர விசா கொடுங்கள் என்பதுதான். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நடைப்பயணம் தொடங்கிய போது, எங்கள் குழந்தைகள் வந்து கட்டியணைத்து முத்தம் கொடுத்து கண்ணீரோடு அனுப்பி வைத்தனர். அக்டோபர் 18 ஆம் தேதி 650 கி.மீ தூரத்தை நிறைவு செய்து பாராளுமன்றம் நோக்கிச் செல்கிறோம். அன்று எங்களுடன் ஆதரவு தெரிவிக்கும் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்” என்றார்.