ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக அமெரிக்கா ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழலில் ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இந்த தாக்குதளுக்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் டோமினிக் ராப் கூறும்போது, “இராக்கில் அமெரிக்க ராணுவத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இப்படிப்பட்ட பொறுப்பற்ற தாக்குதலை மீண்டும் நடத்த வேண்டாம்” என்றார். அதேநேரம், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஜெருசலேமில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, "எங்கள் மீது தாக்குதல் நடத்த யார் முயற்சித்தாலும் பெரிய அளவில் பதிலடி கொடுப்போம்" என எச்சரித்துள்ளார்.