லெபனான் நாட்டில் மோசமான அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த சாத் ஹரிரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார். அதனையடுத்து புதிய பிரதமராக ஹசன் டயப்பை நியமித்தார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவுன்.
ஹஸன் டயப் தலைமையிலான அரசு ஜனவரி 21 அன்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில் முதன்முறையாக 6 பெண்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் 30 அமைச்சர்கள் அங்கம் வகித்து வந்த சூழலில், இந்த அரசாங்கத்தில் 20 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுள்ளனர். மொத்தமுள்ள 6 பெண் அமைச்சர்களில் ஜெய்னா அகர் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் அந்நாட்டின் துணை பிரதமராகவும் பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் வரலாற்றிலேயே ஒரு பெண் முதன்முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை ஆகும். அதேபோல லெபனான் நாட்டின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள அர்மேனியாரான வார்டின் ஓஹானியன், லெபனானின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் லெபனான் நாட்டில் அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் அர்மேனியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.