
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (05.03.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு, அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது “நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான சு. வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 800 மேற்பட்ட இருக்கைகளை கொண்டு மக்களவை வடிவமைத்தது பாஜக. இது நாடாளுமன்றத்தின் எந்தவொரு கூட்டத்திலும் எடுக்கப்படாத முடிவு. பாஜக வின் மறைமுக செயல்திட்டத்தின் அபாயகரமான முன்னகர்வு.
‘நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது’ என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி தீர்மானம் என்பது பாஜக வின் வஞ்சக அரசியலுக்கு எதிரான உறுதியான முன்னகர்வு” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது, 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கொண்ட முக்கோண வடிவிலான கட்டிடமாக, ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தில் மக்களவையில் சுமார் 888 பேர் வரையிலும், மாநிலங்களவையில் சுமார் 300 உறுப்பினர்கள் வரையிலும் அமரும் வகையில் கட்டப்பட்டன. நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் கூட்டு கூட்டத்தின் போது மக்களவையில் 1280 உறுப்பினர்கள் வரை ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டப்பட்டது. இதனை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.