அமெரிக்க விண்கலம் ஒன்றிற்கு இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி விண்வெளிப்பயணம் மேற்கொண்ட விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், கல்பனா சாவ்லாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம் தன்னுடைய அடுத்த விண்கலத்துக்கு எஸ். எஸ். கல்பனா சாவ்லா என்று பெயர்சூட்டியுள்ளது.
"மனிதர்களைச் சுமந்து செல்லும் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா அளித்த பங்களிப்பு நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும். எங்களின் அடுத்த என்ஜி-14 சைக்னஸ் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டுவதில் நார்த்ராப் க்ரூம்மேன் நிறுவனம் பெருமைகொள்கிறது" என அந்நிறுவனம் இதுகுறித்து தெரிவித்துள்ளது.