
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது சேவக்காரன்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருப்பூர் அருகே உள்ள பஞ்சபாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது மனைவி ஆனந்தி மற்றும் மகள் தீசேனாவுடன் ஆன்மீக சுற்றுலா பயணமாகத் திருச்செந்தூர் மற்றும் திருநள்ளாறு சென்றுள்ளார். அதன் பின்னர் இந்த பயணத்தை முடித்துவிட்டு இன்று (04.05.2025) அதிகாலை 03:30மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் தாராபுரம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது சொந்த ஊரான சேவக்காரன்பாளையம் பகுதியில் செல்லும் போது காங்கேயம் சாலையில் உள்ள குள்ளம்பாளையம் மாந்தோப்பு அருகே சென்ற போது அங்குப் பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் நிலை தடுமாறி மூவரும் விழுந்தனர். இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் பள்ளத்திற்குள் விழுந்ததில் காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதியினர் பலியான சம்பவம் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவமாகத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா சென்றவர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.