நேபாளத்தில் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய விமானம் வெடித்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் 5 பயணிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானதால் அதில் இருந்த 19 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் இருந்த 19 பேரில் 18 பேராக உயிரிழந்த நிலையில் விமானி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து விமானி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் விமான ஓடுபாதையில் விமானம் வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன. மேலும் இந்த விபத்து காரணமாக காத்மாண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.