
கேரளாவில் கடந்த ஒரு சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாகக் கேரளாவிற்கு தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லை வழியாக வரக்கூடிய வாகனங்களில் தான் போதைப் பொருட்கள் பல இடங்களில் இருந்து கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாகத் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோழிக்கோட்டில் கொடுவள்ளி என்ற இடத்தில் கர்நாடகா எல்லைப் பகுதியாக இருக்கக் கூடிய ஒரு பகுதியாக உள்ள இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்து ஒரு காரில் 2 பேர் வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வந்த காரை சோதனையிட்டனர். அப்போது காருக்குள் ரகசிய அறை ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து காரில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்த போது 4 கோடி ரூபாய் பணம் காருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரிடமும் இந்த பணம் யாருக்காக எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காரில் ரகசிய அறை அமைத்து 4 கோடி ரூபாய் பணத்தைக் கடத்தி வரப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.