
நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்களை அளிக்க ஏதுவாக, சகாயத்திற்கு, ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பின், அதனடிப்படையில் போதிய பாதுகாப்பை அளிக்குமென தமிழ்நாடு காவல்துறை உறுதியளிக்கிறது என காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான உ. சகாயத்திற்கு, கட்ந்த மார்ச் மாதம் மதுரை சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. அப்போது அவர் தன்னுடைய பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது பாரபட்சமானது, குறைபாடுடையது மற்றும் நியாயமற்றது எனக் கூறியதாகத் தெரிய வருகிறது. சகாயம், சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடர்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக இருந்த காலத்தில், 02.11.2014 முதல் அவருக்கு பாதுகாப்பிற்காக மெய்க் காப்பாளர் ஒருவரை அக்டோபர் 2020 வரை வழங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு நடந்த பாதுகாப்பு மறுஆய்வு குழுவானது (SRC),அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்தது. இருப்பினும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இப்பாதுகாப்பானது தொடர்ந்து வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் 02.01.2021 அன்று, விருப்ப ஓய்வில் சென்றார். மேலும், 20.03.2023 அன்று நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு குழு கூட்டத்தின்போது, அப்போதைய பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத 22 நபர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில், குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் சகாயத்திற்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 30.05.2023 அன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளருக்கு அவர் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும், தனக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, 28.08.2023 மற்றும் 18.10.2023 ஆகிய தேதிகளில் . சகாயம் தலைமைச் செயலாளருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தார். எனினும், 20.03.2023 அன்று நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அவருக்கு குறிப்பிட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லையென்ற காரணத்தால், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பானது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு காவல்துறை தலைமை இயக்குநரால் 02.12.2023 அன்றுகாயத்திற்கு பதில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

20.03.2023 நிலவரப்படி சகாயத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து. கவனத்துடன் பரிசீலனை செய்யப்பட்டு மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் முடிவு,சரியான முறையில் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே எடுக்கப்பட்டது. மேலும், இவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்னரே இவர் இது குறித்து பேசி வருகிறார். எனினும், இவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்போது ஏதேனும் குறிப்பிடும்படியான அச்சுறுத்தல் இருப்பின், அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.