
எத்தனை காலங்கள் மாறினாலும் இந்தி - சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதியுள்ள 4வது கடிதத்தில், “தி.மு.க. பிறந்தது முதல் இந்த 75 ஆண்டுகளாகச் சந்திக்காத களம் இல்லை. எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது. தி.மு.க ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள் - அலறுகிறார்கள். திமுகவை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையையும் மொழிவழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள்தான் உண்மையான தேசவிரோதிகள். ‘இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே, கற்றுக்கொள்ளக்கூடாதா?’ என்று கரிசனத்துடன் பேசுகிறவர்களிடம், ‘சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழிலேயே கோயில்களில் அர்ச்சனை செய்யலாமா?’ என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் அடையாளமும் அம்பலமாகிவிடும்.
மூதறிஞர் ராஜாஜிக்குப் பிறகு, 1948ஆம் ஆண்டு பள்ளிகளில் மீண்டும் இந்தி கட்டாயப் பாடம் என அறிவிக்கப்பட்டபோது, தந்தை பெரியார் தனது தளபதியான பேரறிஞர் அண்ணாவை போராட்டக் களத்தில் சர்வாதிகாரியாக அறிவித்து, மொழிப்போருக்கான திராவிடப் படையைக் களம் காணச் செய்தார். அப்போது முதலமைச்சராக இருந்த பண்பாளர் ஓமந்தூர் ராமசாமியார் தந்தை பெரியாருடன் கலந்துரையாடி, தமிழுணர்வுக்கு மதிப்பளித்ததன் விளைவாக இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது. இன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்கின்ற கட்சியின் தலைவர்கள் இந்தியைத் திணிப்பதும், அதை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதுமாக இருக்கிறார்கள்.
இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்களோ, இந்தி தெரியாத தமிழர்களை நோக்கி வடமாநிலத்தவர்கள் திட்டினால் புரிந்துகொள்ள முடியாது என்றும், வடமாநிலங்களுக்குச் சென்றால் உணவகங்களில் ஆர்டர் பண்ண முடியாது என்றும், கழிவறை செல்வதற்குக் கூட இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் எல்லோரும் எள்ளி நகையாடும் வகையிலான அற்பக் காரணங்களைச் சொல்கிறார்கள். இரயில் பயணத்தில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியில் திட்டினால், பதிலுக்கு நம்மவர்கள் அவர்களைத் தமிழில் திட்ட முடியாதா? சுயமரியாதை உணர்வும் சூடும் சுரணையும் உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள். இங்குள்ள பா.ஜ.க.வினர் எப்படிப்பட்டவர்களோ.
இரயில் நிலையங்களில், அஞ்சலகங்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தொடங்கி, இந்தியே முதன்மையாக இருப்பதை எதிர்த்து, அந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிட இயக்கங்கள் தொடங்கின. ஒன்றிய அரசு அலுவலகங்களில் 1952 திருச்சி ரயில்வே சந்திப்புப் பெயர்ப்பலகையில் இந்தி எழுத்துகளைத் தந்தை பெரியார் அழிக்க, மற்றொரு பகுதியில் கலைஞரும் அவருடன் ஊர்வலமாக வந்த தி.மு.க.வினரும் அழித்தனர். அந்தந்த மாநில இரயில் நிலையங்களில் அவரவர் தாய்மொழி முதன்மையாகவும், இந்தி எழுத்துகள் எழுத்துகள் அடுத்ததாகவும், ஆங்கிலம் மூன்றாவதாகவும் இருக்கிறதென்றால் அதற்குத் திராவிட இயக்கம் முன்னெடுத்த மொழிப் போராட்டமே காரணமாகும்.

இந்தியா என்பது ஒற்றை நாடல்ல, இது ஒரு துணைக் கண்டம் என்பதை ஒட்டுமொத்த மக்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் முதன்முதலில் உரக்க முழங்கிய இயக்கம் நம் தி.மு.க. அதன் விளைவாகத்தான். ‘இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கும்’ என்ற உறுதிமொழியைப் பிரதமர் நேரு வழங்கினார். அண்ணா 1962ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகி ஆற்றிய முதல் உரையே ஒட்டுமொத்த அவையையும் கட்டிப்போட்டது. I belong to the Dravidian Stock என்ற அவரது புகழ்பெற்ற உரை, ஆட்சியாளர்களின் பார்வையில் புதிய திருப்பத்தை உருவாக்கியது. 'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' என்று அண்ணா ஆற்றிய உரையில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதால் இந்தியாவின் பிற மொழிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதைத் தன் அழுத்தமான வாதங்களால் முன்வைத்தார்.
இந்தி பேசும் மாநிலங்களின் மக்களுக்கு அதுவே தாய்மொழி - அரசு மொழி - பயிற்று மொழி. இந்தி பேசும் மக்களுக்கு இவ்வளவு வாய்ப்புகள், உரிமைகளை வழங்கிவிட்டு, இந்தி பேசாத மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டார். அன்று அண்ணா கேட்டதைத்தான் நாமும் கேட்கிறோம். காலம் மாறிவிட்டது அதனால் இந்தியைத் திணிப்போம் என்கிறார்கள் இன எதிரிகள். எத்தனை காலங்கள் மாறினாலும் இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.