








அண்மையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(28.2.2025) சென்னை ஐஐடியில் நடைபெறும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர மறுத்து 'இந்தி' படித்தால் தான் தருவோம் என ஆணவத்துடன் 'பிளாக் மெயில்' செய்யும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்ப்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு அவருக்கு பதில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று ஐஐடி வளாகம் முன்பு மத்திய அரசை கண்டித்தும் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் வருகையை கண்டித்தும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.