
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று தங்கி உள்ளார். அதன் பின் உறவினர் வீட்டிலிருந்து தனது வீட்டிற்குச் செல்வதாகத் தெரிவித்துவிட்டு, நேற்று முன்தினம் சிறுமி கிளம்பியுள்ளார். ஆனால், சிறுமி தனது வீட்டிற்கும் வரவில்லை. உறவினர் வீட்டிற்கும் திரும்பிச் செல்லவில்லை.
அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதனால், அவரது பெற்றோர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்குத் தேவ் பாலா என்பவர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு போலீஸார் தேவ் பாலாவைக் கைது செய்தனர். மேலும் அச்சிறுமியை மீட்டனர். கைதான தேவ் பாலா கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் திருவானைக்காவல் பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்துவருகிறார் என்பதும் தெரியவந்தது. கைதான அவர் மீது போக்ஸோ சட்டம் பதியப்பட்டுள்ளது.