பெரம்பலூர் அருகே டிக் டாக் செயலி மோகத்திற்கு அடிமையான பெண் ஒருவர் விஷம் குடித்து தான் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை டிக் டாக் பதிவாக வலைதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் சிங்கபூரில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மனைவி அனிதா (வயது 24) குழந்தைகளுடன் சீராநத்தம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். மோனிகா (5) அனிரூத் (3) என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் டிக் டாக் செயலி மீது மோகம் கொண்டு பாடல் பாடுவது , நடனமாடுவது என 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.
இதனிடையே டிக் டாக் செயலியில் மூழ்கி குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை என வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் அனிதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த(10 ம் தேதி) விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்த மகள் மோனிகா தனது பாட்டியிடம் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து அனிதா அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால்அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து குன்னம் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்து விசரணை நடைபெற்று வருகிறது. டிக் டாக் மோகத்தால் தான் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடிப்பதை டிக் டாக்கில் பதிவேற்றும் அளவிற்கு டிக் டாக் செயலி மனித மனங்களை செயலிழக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.