சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் கலாவதி(56). அம்மா உணவகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் இவர் அப்பகுதியில் மகளிர் குழு தலைவராக இருந்து வருகிறார். கலாவதி வசிக்கும் பகுதியில் வசித்து வரும் அமுதா(52) என்ற பெண் மூலம் சுகந்தி(49) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலாவதி மகளிர் குழு தலைவராக இருப்பதால் உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு ஆளுக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் என 2 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை லோன் வாங்கி தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்பு உங்கள் குழுவில் உள்ள 22-நபர்களிடமும் முன்பணம் வாங்கித் தருமாறும் அவ்வாறு நீங்கள் முன்பணம் வாங்கி கொடுத்தால் ஒரு மாதத்திலேயே லோன் வந்துவிடும் எனவும் சுகந்தி ஆசை வார்த்தை கூறி மோசடி வலையை விரித்துள்ளார். சுகந்தி விரித்த மோசடி வலையை உண்மை என்று நம்பிய மகளிர் குழுவில் உள்ள 22 நபர்களும் ஆளுக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை மொத்தம் 7-லட்சத்து 68,000 ரூபாய் லோன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முன்பணம் கொடுத்துள்ளனர். முன்பணம் கட்டினால் ஒரு மாதத்திற்குள்ளேயே லோன் வந்துவிடும் என்று சுகந்தி கூறியதை நம்பி காத்திருந்த மகளிர் குழு உறுப்பினர்கள் பல மாதங்கள் கடந்தும் லோன் வராததால் சுகந்தியிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் லோன் நிறுவன அலுவலர் பாத்திமா என்பவரை மகளிர் குழுவினருக்கு அறிமுகப்படுத்தி பாத்திமாவுக்கு ரூபாய் 5 லட்சம் முன்பணம் கட்டினால் லோன் உடனடியாக கிடைத்துவிடும் என சுகந்தி கூறியுள்ளார். அதையும் நம்பி பல தவணைகளாக மகளிர் குழுவினர் பாத்திமாவுக்கு 5 லட்சம் கட்டியுள்ளனர். மேலும் சுகந்தி கலாவதியிடம் என்னுடைய வீடு அடமானத்தில் உள்ளது என அழுது புலம்பி எனக்கு 10-லட்சம் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். கலாவதி என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூற உனது மகள்களின் நகைகளை அடமானம் வைத்து கொடு லோன் பணம் கிடைத்ததும் நகைகளை மீட்டு தருகிறேன் எனக்கூறியுள்ளார். அதனை நம்பி கலாவதி மகளின் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூபாய் 7 லட்சம் ரொக்க பணமும். மீதமுள்ள 3 லட்சம் வட்டிக்கு வாங்கி சுகந்தியிடம் கொடுத்துள்ளார்.
பின்பு அந்த பணமும் திரும்பி தராததால் ஏமாற்றமடைந்து சுகந்தியிடம் நேரில் சென்று கலாவதி கேட்டுள்ளார். அப்பொழுது சுகந்தி உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் வீட்டுபக்கம் வந்தால் அடித்து கொன்றுவிடுவேன் என கொலைமிரட்டல் விடுத்து விரட்டியதாக கூறப்படுகிறது. பாத்திமா மற்றும் சுகந்தியிடம் கொடுத்த பணம், தங்க நகைகளை மீட்டு தருமாறு தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்ததோடு, மகளிர் குழு மூலம் லோன் வாங்கித் தருகிறோம் முன்பணம் கொடுங்கள் என யாராவது கூறினால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் பேட்டியளித்துள்ளனர்.