திருப்பூரில் ரேசன் கடையில் எடை போடுவதில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பொன்முத்துநகர் பகுதியில் உள்ள ரேசன் கடையில் இந்திராணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பொருட்களை எடை போடுவதில் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார் எனத் தொடர்ந்து தகவல் பரவி வந்துள்ளது. மேலும் இவர் துவரம் பருப்பை திருடிச் சென்றதை வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில் இந்திராணியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், வாடிக்கையாளர் ஒருவர் துவரம் பருப்பை கொடுத்து அதை எடை போடும்படி கூறியதற்கு இந்திராணி இத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று எடை போட மறுக்கிறார். தொடர்ந்து வற்புறுத்த அவர் அருகில் இருந்த துவரம் பருப்பை எடை போடும் இயந்திரத்தில் போட்டு வாடிக்கையாளர் கொடுத்த பருப்பையும் அதில் கொட்டியுள்ளார். அதை கண்டுபிடித்த வாடிக்கையாளர்கள், இந்த வேலையை ஏன் பார்க்கிறீர்கள். அந்த பருப்பை ஏன் இதில் கொட்டினீர்கள் என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அந்த ஊழியர் ஆள் வரவில்லை நான் ஒருத்தியாக வேலை செய்வதால் சரியாக கவனிக்கவில்லை எனக் கூறியுள்ளார். ஆட்கள் வரவில்லை என்றால் கடையைப் பூட்டிவிட்டு எழுதிப் போட்டுவிட்டு செல்லுங்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேள்விகளால் துளைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறது.