விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வளுவர்ரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரதா. இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு சுரேஷ் திடீரென வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கணவரை தேடும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயப்பிரதா இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
தொலைந்து மூன்று ஆண்டுகள் ஆன போதிலும் 3 ஆண்டுகளாக இந்த புகாரின் அடிப்படையில் சுரேஷை போலீசார் தேடி வந்தனர். இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக் டாக் வீடியோ ஒன்றில் சுரேஷ் போன்ற நபர் ஒருவர் திருநங்கையுடன் ஜோடியாக ஆடிப்பாடும் வீடியோக்கள் வெளியானது. இதைக் கண்ட ஜெயப்பிரதாவின் உறவினர்கள் உனது கணவன் திருநங்கை ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான ஆதாரமாக அந்த வீடியோவையும் அவரிடம் காட்டினர். இதனையடுத்து டிக் டாக் வீடியோவில் இருந்தது சுரேஷ் தான் என உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனே இந்த தகவலை விழுப்புரம் காவல் நிலையத்திற்கு ஜெயப்பிரதா கொண்டு சென்றார்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி சுரேஷை தேடி வந்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த திருநங்கை அமைப்பு சார்ந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த பொழுது டிக் டாக் வீடியோவில் சுரேஷுடன் இருப்பது ஓசூரை சேர்ந்த திருநங்கை என்பதை கண்டறிந்தனர்.
திருநங்கைகள் குழு அளித்த தகவலின் பேரில் ஓசூர் சென்று விசாரித்தபோது திருநங்கையை திருமணம் செய்து கொண்டு சுரேஷ் குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுரேசை மீட்டு வந்த காவல்துறையினர் அவை அவரை ஜெயப்பிரதா விடம் சேர்த்து வைத்தனர்.
தான் வீட்டில் இருந்து சென்ற பின்னர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் டிராக்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும், அப்போது அங்கு வந்த திருநங்கையுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக திருநங்கையை திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து கொண்டதாகவும் தெரிவித்தார் சுரேஷ். மனைவி குழந்தைகளை தவிக்க வைத்துவிட்டு திருநங்கையுடன் குடும்பம் நடத்திய கணவனை போலீசார் மீட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.