தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவை ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி அன்று இரவுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று (31/03/2021) கோவை வந்தார். அதைத் தொடர்ந்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும், பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இதனிடையே, டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியில் கடைகளை அடைக்கச் சொல்லி பா.ஜ.க.வினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஆதித்யநாத் வருகையின்போது பாஜக செய்த அடாவடிகள் கண்டனத்திற்குரியவை. கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக் கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்துவது இதற்காகத்தான். ‘கலவர ஸ்பெஷலிஸ்டுகளை’ ஒற்றுமையால் முறியடிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பா.ஜ.க.வினர் கடைகளை அடைக்கச் சொல்லி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும், வி.எம். காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்ற கமல்ஹாசன், தனது ஆதரவினை தெரிவித்தார். அப்போது கடை உரிமையாளர்கள் கமலிடம் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘இரு மதத்தினரிடையே வன்முறையைத் தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.