திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தழுவி ஊராட்சியைச் சேர்ந்த தாரமங்கலம் பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமச்சந்திரன் என்பவர் அக்கோவிலின் பூசாரியாக உள்ளார். இவர், 12ஆம் தேதி கோவிலில் அபிஷேகம், ஆராதனை முடித்துவிட்டு இரவு 9 மணிக்குக் கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
மீண்டும் 13ஆம் தேதி காலை 5 மணிக்குக் கோவிலைத் திறக்கச் சென்றபோது, மர்ம நபர்கள் கோவிலின் கதவைத் திறந்து உள்ளே வைத்திருந்த இரண்டு உண்டியலைத் திருடிச் சென்றது தெரியவந்தது. உண்டியலில் 5,000 ரூபாய் வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும், திருடிய உண்டியலில் இருந்த பணத்தை எடுத்த மர்ம நபர்கள், உண்டியலை ஊரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணவாய் மேடு என்ற இடத்தில் வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.