சென்னையில் புழல் மத்திய சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த திடீர் சோதனையில் சில கைதிகளின் அறைகளில் இருந்து, சொகுசு விடுதி போல அதிநவீன 18 டிவி, டிவிடி பிளேயர், ரேடியோ, செல்போன், மூட்டை மூட்டையாக பிரியாணி அரிசி, சமைத்து சாப்பிட காஸ் ஸ்டவ், கஞ்சா பொட்டலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் படங்களும் வெளியாகின. புழல் சிறையை சில கைதிகள் அரசியல் செல்வாக்குடன் சொகுசு விடுதி போல பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் மத்திய சிறையில் இருந்து இரண்டு செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழகம் முழுவதும் புழல் சிறை உள்ளிட்ட ஆறு முக்கிய சிறைகளின் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். புகாருக்குரிய சிறைக்காவலர்களும் மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில், சேலம் மத்திய சிறை எஸ்.பி.ஆக பணியாற்றி வந்த ஆண்டாள், வேலூர் மத்திய சிறைக்கு திடீரென்று இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார். எஸ்.பி. ஆண்டாள் இடமாறுதல் செய்யப்பட்டதன் பின்னணியில் பல பரபரப்பு தகவல்கள் சொல்லப்படுகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, மத்திய சிறை போலீஸ்காரர் ஒருவர், வழிப்பறி வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே உள்ள கைதி ஒருவருடன் கூட்டு சேர்ந்து, சிறைக்குள் இருக்கும் கைதிகள் கேட்டதாக அவர்களின் உறவினர்களைத் தேடிச்சென்று ஆயிரக்கணக்கில் பணம் கறந்து வந்தது தெரிய வந்தது.
உள்ளூர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்துவிட்டாலும், மூளையாக செயல்பட்ட சிறைக்காவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எஸ்.பி. ஆண்டாள் மெத்தனமாக இருந்து வந்தார். தவிர, அடிக்கடி சேலம் மத்திய சிறையில் இருந்து செல்போன், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து வந்தது.
குற்றங்களைத் தடுக்க தவறியதாகவும், பணியில் அலட்சியமாக இருந்ததாகவும்தான் அவரை வேலூர் மத்திய சிறைக்கு சிறைத்துறை நிர்வாகம் தூக்கி அடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, சேலம் மத்திய சிறை ஏடிஎஸ்பி சங்கரிடம், சிறை நிர்வாக பொறுப்புகள் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன.