Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; சாட்சிகளிடம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

 

Case against Minister Senthil Balaji Court allows questioning of witnesses

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். சுமார் ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி (12.08.2024) குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கை அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி (09.01.2025) தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சார்பாக வழக்கறிஞர் என். ரமேஷ் இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் முன்னாள் உதவியாளர் சண்முகம், அரசு அதிகாரிகள் உட்பட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே முதல் சாட்சியான கரூர் வைசியா வங்கியின் மேலாளர் ஹரிஷ் மற்றும் மற்றொரு சாட்சியான தடய அறிவியல் துறையின் கணினி பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடமும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் இன்று (05.03.2025) காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அதன் பின்னர் வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி மீண்டும் பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போதும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். அச்சமயத்தில் அமலாக்கத்துறை சார்பில் முதல் சாட்சியான வங்கி மேலாளர் ஹரிஷிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை விசாரணை நிறைவடைந்த நிலையில் 6வது சாட்சியான சகாயராஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

Case against Minister Senthil Balaji Court allows questioning of witnesses

இதற்கு அனுமதி அளித்த நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி, தொடர்ந்து அமலாக்கத்துறையின் வழக்கில் உள்ள சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கில்  விரைந்து விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்