
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்திய 10வது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டி வரை சென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதிய உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற செஸ் டை பிரேக்கர் சுற்றில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வீழ்ந்த நிலையில், இரண்டாம் சுற்று டிராவில் முடிந்தது. இதனால் நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வந்தன. இந்நிலையில் போட்டிகளை முடித்துக்கொண்டு அஜர்பைஜானின் பாகுவில் இருந்து தற்போது தமிழகம் திரும்பியுள்ளார் பிரக்ஞானந்தா. சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரக்ஞானந்தா தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.