
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ரூ.22.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் மேம்பாட்டுப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். இராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.இராஜேந்திரன் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாத் துறையினை மேம்படுத்திடவும், உள்ளூர் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி பொருளாதார நிலையினை உயர்த்திடவும் பல்வேறு திட்டங்களை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறார். சிதம்பரம் அருகே உள்ள சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் படகுசவாரி மேற்கொள்ளும் வகையில் 15 மோட்டார் படகுகள் மற்றும் 35 துடுப்பு படகுகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 8,13,080 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 2,230 வெளிநாட்டுப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்த்திடவும், அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் பொருட்டு கூடுதல் வசதிகள் செய்திடும் வகையில் பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள் மற்றும் உணவகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. நிர்வாகக் கட்டடம், உணவு அருந்துமிடம், நுழைவுச்சீட்ட கட்டடம், 3 கழிப்பறை கட்டடம், சாலையோரக் கடைகள், தொலைநோக்கு கோபுரம், 4 இடங்களில் பயணிகள் நிழற்குடை, இருக்கையுடன் கூடிய பயணிகள் நிழற்குடை, 2 அலங்காரச் சிலைகள், சுற்றுச்சுவர் நீட்டிப்பு, வடிகால் ஏற்பாடுகள், கிரானைட் கற்களால் அமர்வு இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், மரங்கள் மற்றும் புல் தரைகள் ஏற்படுத்துதல், வாகன நிறுத்தம் என ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

நியாயமான கட்டணத்தில் அனைத்து நவீன அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ஏற்படுத்திடும் பொருட்டு சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 24 தங்கும் அறைகள், கலையரங்கக்கூடம், உணவருந்தும் கூடம், சுற்றுச்சுவர், வாகனநிறுத்தம் போன்ற பணிகள் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கண்ணன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் பைசல், கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மேலும் அமைச்சரிடம், சிஐடியு படகு ஓட்டுநர் சங்கத்தின் தலைமைமையில் 50-க்கும் மேற்பட்ட படகு ஓட்டுனர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.