Skip to main content

நகர்மன்ற கூட்டத்தில் தகராறு; துணை தலைவரை ஆபாசமாக பேசிய வார்டு உறுப்பினர்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Dispute in Chidambaram Municipal Council meeting

 

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம்  நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணை தலைவர் முத்துக்குமரன், நகராட்சி பொறியாளர் மகாராஜன் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மக்கீன், மணிகண்டன், ஜெயசித்ரா பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 32 வார்டுகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகளைப் பேசினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், சிதம்பரம் பகுதியில் ரூ. 214 கோடிக்கு திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே உறுப்பினர்களின் கோரிக்கையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இந்த நிலையில் நகர்மன்ற கூட்டத்தில் சுயேட்சையாக நின்று திமுக சின்னத்தில் வெற்றிபெற்ற 13-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் பேசி முடித்தவுடன் நகர்மன்ற துணை தலைவர் பேச முயற்சித்தார். அப்போது நகர் மன்ற தலைவர் மணியை அடித்து கூட்டத்தை முடித்து விட்டார். இதற்கு நகர் மன்ற துணை தலைவர் எதுவும் பேசாமல் அடுத்த கூட்டத்தில் பேசிக் கொள்ளலாம் என அவர் கையில் வைத்திருந்த குறிப்புகள் அடங்கிய பேப்பரை பையில் வைத்துக்கொண்டு மன்றத்தை விட்டு வெளியேற ஆயத்தமானார்.  

 

அப்போது வார்டு உறுப்பினர் ரமேஷ் நகர்மன்ற துணை தலைவர் இருக்கையின் அருகே வந்து, “நான் மூத்த நகர் மன்ற உறுப்பினர். நான் பேசிய பிறகு நீ பேசி என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நீ அசிங்கப்படுவாய். மல்லாந்து படுத்து எச்சியை துப்பிக் கொள்ளாதே மன்றத்தில் நான் தான் நிறைவுரையாற்றுவேன்” எனக் கூறியுள்ளார். அதற்கு நகர்மன்ற துணை தலைவர், “நான் எப்போது பேச வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்? வார்டு உறுப்பினர்கள் சில தகவல்களை விட்டிருப்பார்கள். அதனை ஒருங்கிணைத்து நான் தான் நிறைவுரையாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.  

 

Dispute in Chidambaram Municipal Council meeting

 

இதற்கு நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் நகர் மன்ற துணை தலைவரை ஆபாசமாக ஒருமையில் திமுக வார்டு உறுப்பினர்கள் மத்தியில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. மற்ற திமுக உறுப்பினர்கள் தடுத்தும் ரமேஷ் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் வார்டு உறுப்பினர் ரமேஷுக்கும் நகர்மன்ற துணை தலைவர் முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ரமேஷ் மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசினார்.

 

அங்கிருந்த சக நகர்மன்ற உறுப்பினர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்று அனுப்பினர். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, “அவையின் மூத்த மன்ற உறுப்பினர் இதுபோல் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது. இவருக்கு எதாவது பேச வேண்டும் என்றால் நகர்மன்ற தலைவரைத் தான் கேட்க வேண்டும். எனவே அவர் வரும் அவைக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்