அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா இன்று (23/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரத்தில் தி.மு.க. கொடி கம்பம் வைக்கும் பணியில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிஞ்சு உயிர் இது போன்ற அனாவசிய செயலுக்காக இந்த உலகைவிட்டு சென்றது மன வேதனையையும் கோபத்தையும் தூண்டுகிறது.
எப்போது தீரும் இந்த உயிரை வாங்கும் விளம்பரப் பசி? விளம்பர பதாகைகள், கொடி கம்பங்கள் வைக்கும் அரசியல் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஒன்றாகும். அதுவும் குழந்தை தொழிலாளியைக் கொண்டு கொடி கம்பம் கட்டியது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். விபத்து என்று இது போன்ற நிகழ்வுகளை கடந்து செல்ல முடியாது.
சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் பதாகை விழுந்து மறைந்த சுபஸ்ரீ மரணத்தின் வடுவே இன்னும் மறையவில்லை. அப்போது எதிர்கட்சியாக இருந்த தி.மு.க. 'நாங்கள் பேனர் வைக்க மாட்டோம் என சபதமிட்டது'. ஆனால் எல்லாமே சொல்லில் மட்டுமே செயலில் இல்லை. அதன் அடிப்படையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
தி.மு.க. அதன் கட்சி என நிதியிலிருந்து இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்க வேண்டும்.மேலும் அந்த சிறுவனை வேலை வாங்கிய நபர் சட்டபடி தண்டிக்கப்பட வேண்டும். இந்த கொடி கம்பம் மற்றும் பேனர் அரசியல் கலாச்சார முறை அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.