அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக திருவண்ணாமலை நகரில் தூய்மை அருணை என்கிற அமைப்பை தொடங்கி, நகரை 45 பகுதிகளாக பிரித்து தூய்மை பணியை கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் செய்து வருகிறார் முன்னால் அமைச்சரும், திமுக மா.செவுமான எ.வ.வேலு.
இந்த தூய்மை அருணை அமைப்பில் திமுகவினர் பசுமை பாதுகாவர்கள் என்கிற பெயரில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பகுதி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 30 களப்பணியாளர்கள் என 35 பகுதிகளில், கழிவுநீர் கால்வாய் தூர் வாருவது, தெருக்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து அள்ளிப்போடுவது, தெருக்களில் கண்டமேனிக்கு குப்பை கொட்டாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இந்த தூய்மை காவலர்கள் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இந்த தூய்மை அருணை அமைப்பின் சார்பில் நகரில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை 22.7.2018 ந்தேதி தொடங்கினர். அந்த விழாவினை திரைப்பட நடிகர் விவேக் வந்து தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எ.வ.வேலு எம்.எம்.ஏ, 27.10.2018 ந்தேதி இந்த அமைப்பை முன்னால் சென்னை மாநகர மேயரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான வைத்து இந்த திட்டத்தை தொடங்கி சேவையாற்றி வருகிறோம். அதன் ஒருபகுதியாக இன்று 1 லட்சம் மரக்கன்று நடும் விழாவினை தொடங்குகிறோம்.
இந்த மரம் நடும் விழா தொடக்கத்துக்கு என்.எஸ்.கிருஷ்ணன் போல் சினிமாவில் முற்போக்கு கருத்துக்களை கூறிவரும் நடிகர் விவேக் தான் பொருத்தமானவர் என அவரை அணுகி அழைத்துவந்தோம். திருவண்ணாமலை நகர மக்கள் தங்களது பிறந்தநாள்க்கு மரம் நட்டு வளர்க்க விரும்பினால், எங்கள் தூய்மை அருணை அமைப்புக்கு போன் செய்து தகவலை கூறினால் அப்பகுதி பொறுப்பாளர்கள் வந்து பார்த்துவிட்டு மரக்கன்றும், அதை பாதுகாப்பதற்கான கூண்டும் வழங்குவார்கள். அதேப்போல் பொதுமக்கள் தங்களது காலியான இடங்களில் மரங்களை நட்டு வளர்க்க விரும்பினால் தேவையான அளவு மரக்கன்றும், கூண்டும் வழங்கப்படும். ஒராண்டு கழித்து மரங்கள் வளர்ந்துயிருப்பதை பார்த்து பசுமை பாதுகாப்பு விருதும், சான்றிதழும் வழங்கப்படும் என்றார்.
சிறப்புரையாற்றிய நடிகர் விவேக், 1930ல் பால்பிராண்டன் என்கிற ஆங்கிலேயர் திருவண்ணாமலைக்கு வந்து ரமணமகிரிஷியை பார்த்த அவர் அவரைப்பற்றி புத்தகம் எழுதியபின்பே திருவண்ணாமலை பற்றி உலகம் அறிந்தது. அப்படிப்பட்ட நகரில் தூய்மை அருணை அமைப்பினர் சேவை செய்வது பாராட்டதக்கது, அதோடு மரங்கள் நடும் திட்டம் அற்புதம். மறைந்த முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல்காலம் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, தமிழகத்தில் 1 கோடி மரங்கள் நடும் பணியில் உள்ளேன். இதுவரை 29 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன், இப்போது நடப்படும் 1 லட்சம் மரக்கன்றுகள் என் கணக்கில் சேர்த்துக்கொண்டால் 30 லட்சமாகிவிடும். 8 ஆண்டுகளில் 30 லட்சம் மரங்கள் நட்டுள்ளேன். நான் இதுவரை நட்டுள்ள 29 லட்சம் மரங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று தான் நட்டுள்ளேன், வழங்கியுள்ளேன். இனியும் அப்படித்தான் செய்வேன். என்னிடம் பேஸ்புக், டுவிட்டரில் பலர் வந்து, நீங்க வைக்கற மரங்கள் எல்லாம் எங்கயிருக்குன்னு கேள்வி கேட்கறாங்க. மரத்த வச்சவனே தண்ணீர் ஊத்தனம்ன்னு பாட்டுயிருக்கு. ஒருமரம்ன்னா தொடர்ந்து ஊத்தலாம். 30 லட்சம் மரத்துக்கு எங்க ஊத்தறது. அதனால் மற்றவர்களும் அந்த பணியை செய்யனும். அப்போது தான் நம்நாடு பசுமையாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை தந்து ஊக்குவித்தார் நடிகர் விவேக். செய்தியாளர்களிடம் பேசும்போது, மரங்களை வெட்டிவிட்டு 8 வழிச்சாலை போடுவது மனதுக்கு வருத்தமாக உள்ளது என்றார்.