திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முழு விவசாய கிராமம் பேரையூர். அந்த கிராமத்தில் காலங்காலமாக காவிரித் தண்ணீர் பாய்ந்து நெல் விவசாயம் செழித்திருந்தது. ஆழ்குழாய் பாசனம் குறைவாக உள்ள பகுதி. இந்தநிலையில் கடந்த மாதம் முதல் திடீரென அந்தப் பகுதியில் அகலமான சாலை அமைக்கும் பணி நடக்கிறது. சாலைப் பணிக்காக ஆற்றை தூர்த்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கேட்டும் எந்த பதிலும் கிடைக்காததால் தொகுதி திமுக எம் எல் ஏ டி.ஆர்.பி.ராஜாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இன்று காலை அந்தப் பகுதிக்குச் சென்ற எம்எல்ஏ பணி விபரம் குறித்த பதாகை இல்லாமல் சில அதிகாரிகளிடம் கேட்க நபார்டு திட்டத்தில் சாலை என்று மட்டும் பதில் கூறியுள்ளனர். மேலும் நீர்வழிப்பாதையை அடைத்து சாலை அமைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு எந்த அதிகாரியும் பதில் சொல்லவில்லை. அதனால் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு ஆற்றின் அகலம் என்ன என்பதை அறிய வேண்டும் எப் எம்பி கணக்குடன் வாருங்கள் என்று அழைத்துள்ளார். ஆனால் அந்தப் பக்கமே வராத கிராம நிர்வாக அலுவலர் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கொண்டார். 3 முறை அழைத்தும் வராததால் ஆற்றின் அளவை எம்எல்ஏவே அளந்து பார்த்துவிட்டு மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்று தாம்பூலத்தில் பழம், பூ, வெற்றிலை பாக்கு வைத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவலருக்காக நீண்ட நேரம் காத்திருந்தார்.
அப்போது துணை தாசில்தார் உள்பட பலரும் எம்எல்ஏவிடம் சமாதானம் செய்தனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலரை நாளை ஆற்றை அளக்க கணக்குடன் வருமாறு தாம்பூலம் கொடுத்து நேரில் அழைக்க வேண்டும் என்று காத்திருந்தார். அதன் பிறகு உள்ளிருந்து வெளியே வந்த கிராம நிர்வாக அலுவலரிடம் தாம்பூலம் கொடுத்து நாளை காலை 10 மணிக்கு அதிகாரிகள் வருகிறார்கள அதனால நீங்களும் தவறாமல் கிராம கணக்குடன் வரவேண்டும் என்று அழைப்புக் கொடுத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ கூறும் போது.. எனது தொகுதிக்குள் விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் ஆற்றை தூர்த்து சாலை அமைப்பதாக கிராம மக்கள் சொன்னார்கள் வந்து பார்த்தேன். எந்த திட்டத்தில் சாலை பணி எதற்காக பணி என்ற எந்த பதாகையும் இல்லாமல் வேலை நடக்கிறது. அதனால் எனக்கு சந்தேகமாக உள்ளது. அதாவது மீத்தேன் அரக்கனை கொண்டு வந்து எங்கள் விவசாயத்தை அழித்து இயற்கை வளங்களை கொண்டு செல்ல இந்த சாலை அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் தண்ணீர் பாய்ந்தால் தானே விவசாயம் நடக்கும் என்பதால் திட்டமிட்டே விவசாயத்திற்கு தண்ணீர் பாயும் ஆற்றின் அளவை குறைப்பதாக நினைக்கிறேன்.
அருகில் உள்ள பாலம் 19 மீட்டர் அளவில் உள்ளது. 3 கண்களில் தண்ணீர் செல்கிறது. ஆனால் இப்போது 4 மீட்டர் அளவு கூட ஆறு இல்லை. இதனால் வெள்ள காலங்களில் பெரும் பாதிப்பு வரும் விவசாய காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வரும். அதனால தான் ஆற்றின் அளவை காண கிராம கணக்கை எடுத்து வர கேட்டோம் கிராம நிர்வாக அலுவலர் வரவில்லை. இப்ப தாம்பூலம் வைத்து அழைத்திருக்கிறோம். நாளை நிச்சயம் வருவார் என நம்புகிறோம். எந்த சூழ்நிலையில் விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழிக்கவிடமாட்டோம் என்றார்.