Skip to main content

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 16/03/2025 | Edited on 16/03/2025

 

Writer Narumpoonathan passes away CM MK Stalin condoles

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் (வயது 64). இவர்  உடல்நலக்குறைவால் காலமானார். இவர் யானைச் சொப்பனம், கண் முன்னே விரியும் கடல், இலை உதிர்வைதப் போல, வேணுவன மனிதர்கள், ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர் ஆவார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய நிர்வாகியாகவும் பதவி வகித்து வந்தவர் நாறும்பூநாதன் ஆவார்.

இந்நிலையில் எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர் ஆவார். அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

நாறும்பூநாதனது இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள். பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022ஆம் ஆண்டுக்கான உவே.சா. விருதினை ஆரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவரான எழுத்தாளர் நாறும்பூநாதனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் இலக்கியத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்