
கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இப்போட்டியை இன்று காலை தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் ஆயிரம் காளைகள் பங்கேற்ற நிலையில் 650 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலையிலிருந்து விறுவிறுப்பாக போட்டியில் நடைபெற்று வந்த நிலையில் சோழவந்தான் அடுத்த கச்சிராயிருப்பு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் மகேஷ் பாண்டி மாடுபிடி வீரராக களத்தில் இருந்துள்ளார். அப்பொழுது மார்பில் ஜல்லிக்கட்டு மாடு கொம்பால் குத்தியதால் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மகேஷ் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த உயிரிழப்பு சம்பவம் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.