
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கணினி வழித் தேர்வுக்கு, முதற்கட்ட கட்ட கணினி வழித் தேர்வில் தமிழகத்தில் இருந்து சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் 19ஆம் தேதி 2ஆம் கட்ட கணினி வழித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தேர்வர்களுக்கு இதற்கான தேர்வு மையங்கள் தமிழகத்திற்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வர்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் மதுரை நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் சு.வெங்கடேசன் எம்.பி.யை அணுகி தேர்வு மையங்களைத் தமிழகத்திற்குள் மாற்றித் தருவதற்குத் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரும் தேர்வு மையங்களை மாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு கேட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ஆம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. 1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும். எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களைத் தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.