
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், மாஸ்க் அணிவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தில், சமீப காலமாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவை கடைப்பிடிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் பங்கேற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பருவ மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கையை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம் மாவட்டத்தில் சிறப்புக் கவனம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.