
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரின் மனைவி தவமணி (வயது 38). இத்தம்பதியருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். கடந்த சில வருடங்களாகவே இத்தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அசோக் குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று (19.02.2025) அதிகாலை வேளையில் தவமணியும், அவரது 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்த போது, அங்கு வித்யதாரணி (வயது 13) மற்றும் அருள் பிரகாஷ் (வயது 5) ஆகிய இரண்டு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். மேலும், தவமணியும், அவரது மற்ற குழந்தையான அருள் குமாரியும் (10) உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அசோக் குமார் தலையிலும் காயம் ஏற்பட்டிருப்பதால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தவமணியும், அருள் குமாரியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அசோக் குமார் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொடூரமாக அரிவாளால் வெட்டிவிட்டு, அக்கம்பக்கத்தினரிடம் மனைவி தான் குழந்தைகளைக் வெட்டி கொலை செய்துள்ளதாக நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது.
அதன் தொடர்ச்சியாக, சேலம் காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் மற்றும் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ் குமார் ஆகியோர் அந்த பகுதியில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அசோக் குமார் தான் மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துள்ளார் என்பது நிரூபணமானது. இதனையடுத்து, இரட்டை கொலை செய்த அசோக் குமார் மீது கொலை உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.