கர்நாடகா மாநிலத்தின் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் குடிநீர் மற்றும் டெல்டா விவசாய பாசனத்திற்காக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), கபினி அணைகளில் இருந்து ஜூலை 16ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 8300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர், தமிழக எல்லையில் உள்ள முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு ஜூலை 20ம் தேதி வந்தடைந்தது. அப்போது நீர் வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கி, நேற்று (ஜூலை 22) மதியம் 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலை 3 மணி நிலவரப்படி 5000 கனஅடியாக மேலும் உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இங்கிருந்து மேட்டூர் அணைக்கு இன்று காலை (ஜூலை 23) 7 மணியளவில் காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 213 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த 16ம் தேதி நள்ளிரவு, கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஏழு நாள்களுக்குப் பிறகு இன்று மேட்டூர் அணைக்கு அந்த தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. பண்ணவாடி நீர்த்தேக்க பகுதி வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள அடிப்பாலாறு, பண்ணவாடி பகுதிகளில் காவிரி ஆற்றில் நுங்கும் நுரையுமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததால் இன்னும் தமிழகத்திற்கான நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,'' என்றனர்.
மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1500 கனஅடியாக நீர்வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஜூலை 23ம் தேதி காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக இருந்தது. நீர் இருப்பு 11.64 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு சேலம் வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''மேட்டூர் அணையில் 90 அடிக்கு தண்ணீர் இருந்து, அப்போது சம்பா சாகுபடிக்கு திறந்தால் தான் விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும். போதிய தண்ணீர் அணைக்கு வந்தால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்,'' என்றார். கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் நிலையில், மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு சற்று தாமதமானாலும் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்பதே டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.