திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ரத்தினம் என்பவர் புதிய குடிநீர் இணைப்புக்கு 2 முறை திருநெல்வேலி மாநகராட்சிக்கு பணம் செலுத்தியுள்ளார். இரண்டு முறை புதிய குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நெல்லை மாநகராட்சி ஆணையர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையருக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மனுதாரர் கூடுதலாக செலுத்திய 6 ஆயிரத்து 500 ரூபாயும், மன உளைச்சலுக்காக 15 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தது.
பல மாதங்களாகியும் மனுதாருக்கு உரிய இழப்பீட்டு தொகையை திருநெல்வேலி மாநகராட்சி ஒப்படைக்கவில்லை. இதனால் மனுதாரர் ரத்தினம் மீண்டும் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.