புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). கூலித் தொழிலாளியான இவருக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் 3 பெண் குழந்தைகளையும் காப்பகங்களில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார். மேலும் வயதான அத்தை மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள அவரது மகள் ஆகியோரும் இவருடன் உள்ளனர். செல்வராஜின் உழைப்பில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வந்த கஜா புயலுக்குப் பிறகு பெய்த கனமழையில் குடியிருந்த வீடு இடிந்து தரைமட்டமானது. இந்த நேரத்தில் அரசு வீடுகள் ஒதுக்கியும் கூடுதல் பணம் செலவு செய்து வீடு கட்ட வசதி இல்லாததால் வேண்டாம் என்று தவிர்த்துள்ளார். அதன் பிறகு இந்த குடும்பம் மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டு வைக்கோல் பந்தலுக்காக அமைக்கப்பட்ட பட்டறையில் புத்தகங்கள், உடைகள் போன்ற பொருட்களைச் சாக்கு மூட்டையில் கட்டி வைத்துக் கிழிந்த தார்ப்பாய்களைப் போட்டு மூடி வைத்துப் பாதுகாத்ததுடன் மேலும் பல உடைமைகளை அரசு கட்டிக் கொடுத்த கழிவறையில் வைத்தும் பாதுகாத்து வருகின்றனர்.
செல்வராஜின் மகள்கள் 3 பேரும் சிறு வயதில் இருந்தே காப்பகங்களில் தங்கி அரசு உதவி பெறும் பள்ளியிலும் அரசுப் பள்ளியிலும் படித்து தற்போது மூத்த பெண் அகரம் பவுண்டேசன் உதவியுடன் சென்னையில் பி.எஸ்.சி. நர்சிங் படிக்கிறார். 2வது பெண் அடுத்த வருடம் கல்லூரி செல்ல செலவுக்காக தற்போது கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 3வது பெண் புதுக்கோட்டையில் விடுதியில் தங்கி 11 ஆம் வகுப்பு படிக்கிறார். 3 பெண்களும் ஊருக்கு வரும் போது தங்க இடமில்லாததால் பக்கத்து வீடுகளில் இரவை கழிக்கின்ற நிலையில் உள்ளனர்.
இந்த நிலை பற்றி அறிந்த குளமங்கலம் பாரதப் பறவைகள் அறக்கட்டளை சார்பில் தற்காலிகமாக அந்த குடும்பம் தங்குவதற்கு ஆஸ்பெஸ்டாஸ் மூலம் வீடு கட்டிக் கொடுக்க முன்வந்தனர். இது பற்றிய செய்தி மற்றும் வீடியோக்களை நக்கீரன் இணையத்தில் வெளியிட்டிருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா துரித நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேலும் பலர் உதவிகள் செய்வதாகக் கூறினர். இந்த நிலையில் தான் இதுவரை வீடு இல்லாத 10க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்துக் கொடுத்துள்ள பாரதப் பறவைகள் அமைப்பினர் செல்வராஜுக்கு நிரந்தரமான வீடு கட்டுவதற்கான பணிகள் நடந்து வந்தாலும் மழைக்காலத்தில் இந்த குடும்பம் தங்குவதற்காக ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்துக் கொடுக்க இன்று பூமி பூஜை போட்டுள்ளனர்.