விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா- அச்சங்குளத்தில், சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் ஃபயர் ஒர்க்ஸில், ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரித்தபோது, வெடிமருந்து உராய்வின் காரணமாக, பிற்பகல் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், பள்ளி மாணவி மற்றும் கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உடல் கருகி பலியாகினர்.
இந்தப் பட்டாசு ஆலையில், 30- க்கும் மேற்பட்ட அறைகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தபோது, 15- க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகி, இவ்விபத்து நடந்துள்ளது. படுகாயமுற்ற 36 பேர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வுசெய்து வருகின்றனர்.
பொதுவாக, வணிக நோக்கத்தில், அவசரகதியில், பட்டாசு ஆலை வேலைகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாலேயே, அதுவும் ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கும்போது விதிமீறல்களும் சேர்ந்துகொள்ளும்போது, இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருவதாக, பட்டாசு ஆலை போர்மென் ஒருவர் கூறினார். விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை விதிமீறலாகக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.