கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.
இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.