விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொண்ட சமுத்திர பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சேகர் (வயது 41). கூலி வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சேகர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது வாயில் துணியை திணித்து தன் வீட்டுக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் சிறுமி இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிட்டால் தனக்கு ஆபத்து என்று நினைத்த சேகர் சிறுமியின் தலையில் கல்லை போட்டு படுகொலையும் செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்தும் விட்டார். சிறுமியை காணாத அவரது பெற்றோர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி விளையாடும் போது அருகில் சேகர் இருந்ததை அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனால் சேகர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமியை தூக்கிச் சென்று சிறுமியின் வாயில் துணியை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சிறுமியின் உடலை புதைத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சேகர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் தரப்பில் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சாந்தி அளித்த தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சேகரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்துள்ளனர்.