தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாத ஆசிரியர்களை களைவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 29ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தன்னை மீண்டும் நியமிக்க கோரி பேராசிரியர் சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தகுதியில்லாத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை களைவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 29ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட்டார்.
மேலும், சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், பேராசிரியர், துறை தலைவர் மற்றும் முதல்வருக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி என்ன?, தற்போது பணியாற்றும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்ட கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர், தற்போது பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் எத்தனை பேர் எந்த விவரத்தையும், எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறித்த விவரங்களையும் வரும் 25ம் தேதி தாக்கல் செய்யவும் பல்கலைகழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.