விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். பின்பு சாதித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்த வருகின்றனர். சிலர் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்தில் செயல்பாட்டை தொடங்கியுள்ளார் எனவும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''நடிகர் விஜய் நேற்றைய தினம் மாணவர்களை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி இருக்கிறார். முதன்மையான மதிப்பெண் எடுத்த பெண்ணிற்கு வைர நெக்லஸ் வழங்கியிருக்கிறார். மிகச் சிறப்பான ஒரு விஷயம். இதில் ஒரு அரசியல் இருக்கிறதா இல்லையா என்றால் இருக்கிறது. ஏனென்றால் 235 தொகுதியில் இருந்து மூன்று மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்தால் இந்த மாணவர்களின் பெற்றோர்களின் பேச்சு அந்த தொகுதியில் பரவும். தொகுதி என்றாலே அரசியல் ஆகிவிடும். அவர் பேசுகின்ற பொழுது அம்பேத்கர், பெரியார், காமராஜரை நீங்கள் படியுங்கள் என்றார். மிகப்பெரிய தலைவர்கள் அவர்களை மட்டுமல்ல அண்ணாவைப் படிக்க வேண்டும்; கலைஞரை படிக்க வேண்டும்; எம்ஜிஆரை படிக்கணும்; ஜெயலலிதாவை கூட படிக்க வேண்டும். அதை அவாய்ட் பண்ணி இருக்கிறார். அவர்களிடம் உள்ள சிறப்புகளை எல்லாம் சொல்ல வேண்டும். ஓட்டு போட உங்க அப்பா அம்மா பணம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் எனக்கூறியுள்ளார். இது அரசியலா இல்லையா? நாளைக்கு நான் வந்தா என்கிட்ட ஓட்டு போட காசு வாங்க வேண்டாம் என்று சொல்லுங்க என்பதை மறைமுகமாக சொல்லும் மாதிரியும் அது இருந்தது.
இது எதிர்கால அரசியலுக்கான அடிதான். ஆனால் இன்னும் நிச்சயமாக விஜய் பக்குவப்படவில்லை. நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். அவர் மெர்சல் படத்தில் ஒரே ஒரு டயலாக் பேசினார். இந்திய நாடு ஜனநாயக நாடு பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ள நாடு. அதில் ஜிஎஸ்டி பற்றி சின்ன டயலாக் பேசி விட்டார். அதற்காக வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தனி காரில் கூட்டிக்கொண்டு வந்தார்கள். வழியில் என்ன நடந்தது என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அன்று இரவெல்லாம் அவரது வீட்டில் சோதனை நடந்தது. சோதனை நடக்கட்டும் நடப்பது தப்பில்லை. ஆனால் அந்த சித்திரவதைகள், தவறான அணுகுமுறைகள் மனிதனை துன்பப்படுத்துவது தான் தவறு. அதற்கு அப்புறம் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கும். ஒரு படத்திலும் அரசியல் டயலாக் கிடையாது. அன்னைக்கே அவர் ரசிகர்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தி இருந்தால் அரசியலுக்கு தகுதி உண்டு. அவரிடம் போராட்ட குணம் இல்லை. அரசியலுக்கு வந்தால் அது இருக்க வேண்டும். இப்போ இருக்கும் ஆட்சிகள் எப்படி பழிவாங்குவார்கள், எப்படி உள்ளே போடுவார்கள் என்றே தெரியாது'' என்றார்.