550 கோடி செலவு செய்து அதிமுக ஒரு எம்பி பதவியை பெற்றுள்ளது என்ற திடுக்கிடும் தகவலை தங்கத்தமிழ்ச்செல்வன் தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.
அமமுககட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனியில் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் பேசியதாவது: திமுக நாட்டிலேயே 3வது பெரிய கட்சியாக உள்ளது. அதற்கு ஸ்டாலின் தலைமை வகித்து செல்கிறார். ஜெயலலிதா இல்லாத அதிமுக ஊழல் ஆட்சியாக உள்ளது. ஆயிரத்து 500கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ரூ.550 கோடி செலவு செய்து, அதிமுக ஒரு எம்பி பதவியை பெற்றுள்ளது.
நான் அதிமுக வில் இருந்தபோது, என்னை அக்கட்சியினர் திட்டமிட்டு தோற்கடிப்பார்கள். ஒரு முறை 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுகவினரே தோற்கடித்தனர்.
ஜெயலலிதாவிடம் இவர்கள் விசுவாசமாக இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அழுதுகொண்டே அமைச்சர் பதவி ஏற்றவர்கள். அவர் இறந்த பின்பு அழாமல் பதவி ஏற்றனர். இவர்கள் துரோக கும்பலை சேர்ந்தவர்கள். இவர்களை விரட்ட ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். தேனி மாவட்டத்தில் 4 எம்.எல்.ஏ. தொகுதியிலும் திமுக வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும். பணத்தை எரிர்பார்க்காமல் திமுகவினர் வேலை செய்தனர். அதனால் தான் காசு செலவு செய்யாமல், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3.75 லட்சம் ஓட்டு வாங்கினார். நான் கட்சியில் சேருவதற்கு முதல்நாள் தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இது யாருக்கும் தெரியாது. மறுநாள் கட்சியில் சேர்ந்த பின்பு தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு ரகசியத்தை காக்கக்கூடியவர் தலைவர் ஸ்டாலின்.
அவரை பற்றிய புத்தகத்தை படித்தேன். அவர் கட்சியில் கடந்து வந்த பாதையை படித்தபோது மெய்சிலிர்த்துவிட்டேன். தமிழுக்காக தமிழ்மொழிக்காக அவர் சிறை சென்றார். நான் அதிமுகவிலும், மற்றொரு கட்சியிலும் இருந்தேன். ஆனால் திமுகவில் சேரும் போது, என்னை இன்முகத்தோடு வரவேற்றார்.
எனக்கு மட்டும் அதிகாரம் கொடுங்கள். அமைச்சர் ரூ.3 லட்சம் கோடி பதுக்கியுள்ளார். மற்றவர்கள் தலா ரூ.1 லட்சம் கோடி வரை பதுக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கு வைத்துள்ளனர் என எனக்கு தெரியும். அவற்றை வெளியே கொண்டு வருவேன் என்று கூறியபோது ஸ்டாலினே கைதட்டினார். இவ்வாறு கூட்டத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் பேசினார்!