சுதந்திர தினத்தை முன்னிட்டு தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உலியம்பாளையம் கிராமத்தை தத்தெடுத்தார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்.
சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் கிராமங்களைத் தத்தெடுக்கும் இயக்கத்தின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உலியம்பாளையம் கிராமத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார் வானதி ஸ்ரீனிவாசன்.
கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வீடுகளில் வளர்ப்பதற்கேற்ற மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டன. மின்சார சிக்கனத்திற்காக வீடுகளுக்கு எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டன. நூற்றுக்கணக்கான நூல்கள் மற்றும் வைஃபி வசதியுடனும் உருவாக்கப்பட்ட மக்கள் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. பாஸ்போர்ட், பான்கார்டு, ஆதார், பிறப்பு இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் பொது இ-சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டது. இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இலவச பொது கழிப்பறை கிராமத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நிகழ்வில் கொங்குநாடு நர்சிங் கல்லூரியின் அறங்காவலர் ஆர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை கோவை மக்கள் சேவை மையமும் தாமரை சக்தி டிரஸ்டும் இணைந்து ஒருங்கிணைத்தன.