
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கிராமம் குப்பக்குடி. இந்த கிராமத்தில் ஜாதி மத பாகுபாடின்றி ஒற்றுமையோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்திற்கு குறுகிய காலத்தில் அதிகமான இளைஞர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணிக்கு சென்றுள்ளனர் என்ற சிறப்பும் உண்டு.
இந்த கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள அரசு இடத்தில் முழு உயர அம்பேத்கர் காங்கிரீட் சிலை அமைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறை அலுவலர்கள் அனுமதி பெறாமல் அரசு பொது இடத்தில் சிலை அமைக்க கூடாது என்று சிலையை அகற்றச் செய்துள்ளனர். அதன் பிறகு அந்த சிலை அங்கு ஒரு வீட்டில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு சிலை அமைக்க அனுமதி கேட்டு அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் பயனில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பொதுப்பாதை, சிறுபாதை, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்கள் தவிர மற்ற இடங்களில் சிலை அமைக்க அனுமதி வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் அனுமதி கிடைக்காததால் கடந்த 2021-2022 ல் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவையடுத்து கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் அனுமதி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் கடலூர் மாவட்டத்தில் ஒருவர் தனியார் நிலத்தில் சிலைகள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு தனியார் நிலத்தில் சிலைகள் அமைக்க யார் அனுமதியும் தேவையில்லை என்று கூறியது. இந்த நிலையில் தான் தற்போது கடந்த 6 ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்க மனு மேல் மனுவாக அனுப்பிக் கொண்டிருந்த குப்பக்குடி மக்கள் அதே பகுதியில் உள்ள மறைந்த ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரமோகன் மனைவி செல்வமணியின் சொந்த நிலத்தில் கடந்த 18 ஆம் தேதி இரவு 5 அடி உயர பீடம் அமைத்து அதன் மேல் அம்பேத்கர் சிலையை அமைத்து சுற்றிலும் முள் வேலியும் அமைத்துள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா, சிலையை சுற்றிலும் கம்பி தடுப்புகள் அமைக்க உள்ளனர்.
குப்பக்குடியில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளதையறிந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் சிலை அமைவிடத்திற்குச் சென்று, அனுமதி இல்லாமல் சிலை அமைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் சிலையை சுற்றி நிற்கும் பொதுமக்கள் எங்கள் நிலத்தில் வைத்துள்ள சிலையை அகற்ற முடியாது என்று கூறி வருகின்றனர். இதனையடுத்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனிடையே அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.